மாநகர பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி


மாநகர பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 7 Feb 2020 4:00 AM IST (Updated: 7 Feb 2020 12:31 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் மீது மாநகர பஸ் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம், 

சென்னை புளியந்தோப்பு காந்தி நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மகன் சக்திவேல்(வயது 18). இவர், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சக்திவேல், நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செங்குன்றம் பஸ் நிலையம் அருகே வந்தபோது கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த மாநகர பஸ்(தடம் எண் 114) மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சக்திவேல், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான பண்ருட்டியைச் சேர்ந்த ஆறுமுகம்(39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு விபத்து

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சசிதரன்(36). இவர், சென்னை துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று கொளத்தூர் அருகே உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடடுக்கு திரும்பி வந்தார்.

ராஜமங்கலம் 200 அடி சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சசிதரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான சசிதரனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

Next Story