விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி: தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அலுவலகத்தை பூட்டி போராட்டம்


விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி: தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அலுவலகத்தை பூட்டி போராட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2020 11:15 PM GMT (Updated: 6 Feb 2020 7:27 PM GMT)

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி இருப்பதாக கூறி நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை கோழிப்பண்ணையாளர்கள் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு விலை நிர்ணயம் செய்து வருகிறது.

இந்த அமைப்பு கடந்த ஆண்டு வாரந்தோறும் திங்கள், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் கூடி முட்டை விலையை நிர்ணயம் செய்து வந்தது. இவ்வாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையை விட பண்ணையாளர்கள் குறைவான விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக குற்றம்சாட்டிய அந்த அமைப்பு கடந்த இரு வாரங்களாக தினந்தோறும் முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் முட்டைக்கு கடந்த 4-ந் தேதி 10 காசுகளும், நேற்று முன்தினம் 15 காசுகளும் குறைத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 360 காசுகளில் இருந்து 335 காசுகளாக சரிவடைந்தது.

முற்றுகை

இதற்கு ஐதராபாத் மண்டலத்தில் முட்டை விலை சரிவடைந்து வருவதால், அதை அனுசரித்து நாமக்கல் மண்டலத்திலும் முட்டை கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவினர் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதாகவும், இதனால் பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ந‌‌ஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி 100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணையாளர்கள் நேற்று நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அலுவலகத்துக்கு பூட்டு

அப்போது அவர்கள் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி முட்டை விலையை நிர்ணயம் செய்ய கூடாது. பண்ணையாளர்களின் கருத்தை கேட்டறிந்து கூட்டம் நடத்தி மட்டுமே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் கூட்டத்தை நடத்த வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பண்ணையாளர்கள், தாங்கள் ஏற்கனவே நாமம் வரைந்து கையில் எடுத்து வந்த முட்டைகளுடன் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் இந்த அமைப்பு தங்களுக்கு தேவையில்லை என்று கூறியதோடு அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முட்டைகள் தேக்கம் இல்லை

பின்னர் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மத்திய குழு உறுப்பினர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது முட்டையின் உற்பத்தி செலவு 4 ரூபாய் 10 காசுகளாக உள்ளது. ஆனால் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு 335 காசுகள் என விலை நிர்ணயம் செய்து உள்ளது. இதனால் ஒரு லட்சம் கோழிகள் வைத்துள்ள பண்ணையாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது. எந்த பண்ணையிலும் முட்டைகள் தேக்கம் இல்லாத நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தன்னிச்சையாக செயல்பட்டு முட்டை விலையை குறைத்து நிர்ணயம் செய்து வருகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பண்ணையாளர்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல பொது மேலாளர் பாலசுப்பிரமணியத்திடம் இங்கு நடைபெற்ற நிகழ்வுகளை ‘வாட்ஸ்-அப்‘ குரூப்பில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர். அதை தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர். அப்போது அங்கு வந்த நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையிலான போலீசார் ஊர்வலம் செல்ல முறையாக அனுமதி பெற வேண்டும் என கூறினர்.

இதை தொடர்ந்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு முன்பு சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story