கல்வி கட்டணத்துக்கு எதிர்ப்பு பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் இரவிலும் நீடித்ததால் பரபரப்பு


கல்வி கட்டணத்துக்கு எதிர்ப்பு பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் இரவிலும் நீடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்வி கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை போராட்டம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காலாப்பட்டு,

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்.

பல்கலைக்கழகத்தில் 2020-21ம் ஆண்டுக்கான புதிய கல்வி கட்டணம் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. பழைய கட்டணத்தை விட இது பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று காலை பல்கலைக்கழகத்திற்கு வந்த மாணவர்கள் புதிய கல்வி கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல் கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் அங்கிருந்த இரும்பு தடுப்புகளை கீழே தள்ளி விட்டனர். பின்னர் பல்கலைக்கழக அலுவலகம் நோக்கி சென்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக இருந்தது.

இந்தநிலையில் பல்கலைக்கழகம் தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. துணைவேந்தர் குர்மீத்சிங், பதிவாளர் (பொறுப்பு) சித்ரா ஆகியோர் தான் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மாலை வரை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், பதிவாளர் (பொறுப்பு) சித்ரா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் மாணவர்களின் போராட்டம் இரவு வரை நீடித்தது.

காலை முதல் இரவு வரை மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தால் பல்கலைக்கழகம் பரபரப்பாகவே இருந்தது. இதையொட்டி காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story