மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தில் ஜப்பான் நிதிக் குழுவினர் ஆய்வு


மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தில் ஜப்பான் நிதிக் குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Feb 2020 4:30 AM IST (Updated: 7 Feb 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தில் நேற்று ஜப்பான் நிதிக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அடிக்கல் நாட்டி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எப்போது கட்டுமானப்பணி தொடங்கும் என்று தெரியாத நிலையே நீடிக்கிறது.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் மத்திய அரசின் சார்பில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பை கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமானப் பணிக்கு ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று வரை கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையே நீடித்து வருகிறது.

அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்ட அறிக்கை தயார் ஆக வில்லை. இந்த நிலையில் போக்குவரத்து வசதியின் முன்னோட்டமாக எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைய உள்ள பகுதியான ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரை மத்திய சாலை திட்டத்தின்கீழ் ரூ.21.20 கோடியில் நான்கு வழிச்சாலை மற்றும் இரு வழிச்சாலை அமைக்கும் பணியும், எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை சுற்றி ரூ.5 கோடியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுற்றுச்சுவர் கட்டுமான பணியும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

ஆய்வு

இந்த நிலையில் ஜப்பான் நிதிக் குழுவினர் நேற்று திடீரென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தினை 30 நிமிடங்கள் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம் ஆய்வு குறித்து கேட்டபோது பதில் அளிக்கவில்லை. எய்ம்ஸ் ஆஸ்பத்திரி குறித்த பேச்சு கடந்த 1999-ம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இன்று வரை இடம் ஆய்வு, மண் ஆய்வு, அதிகாரிகள் ஆய்வு, அமைச்சர்கள் ஆய்வு, நிதிக்குழு ஆய்வு என்று மீண்டும், மீண்டும் பல முறை ஆய்வுகள் தான் நடந்துள்ளது.

ஆய்வு என்ற வழியிலேயே ஆண்டுகள் தான் கடந்து போகிறது. ஆஸ்பத்திரி கட்டுமான பணி தொடங்கிய பாடில்லை என்று சமூக ஆர்வலர்கள் முனுமுனுக்கிறார்கள்.

Next Story