தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்


தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 7 Feb 2020 4:54 AM IST (Updated: 7 Feb 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

பழனி,

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா, கடந்த 2-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது.

இதேபோல் நாளை (சனிக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு பழனிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாதயாத்திரையாக வந்த ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர். இவர்கள் பழனி இடும்பன்குளத்தில் புனிதநீராடிய பிறகு அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி, மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

சாமி தரிசனம்

தைப்பூச திருவிழாவையொட்டி திண்டுக்கல், காரைக் குடி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஸ்களில் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் ரெயில் மற்றும் பல்வேறு வாகனங்களிலும் பக்தர்கள் வருகின்றனர்.

பக்தர்களின் வருகையால் பழனி அடிவாரம், பஸ்நிலைய பகுதியில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு சாலையோரத்தில் தண்ணீர், உணவு ஆகியவற்றை தனியார் தொண்டு நிறுவனத்தினர் வழங்கி வருகின்றனர்.

நேற்று மகா பிரதோஷம் என்பதால், காலை முதலே மலைக்கோவில், திருஆவினன்குடி உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வெளிப்பிரகாரங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Next Story