கொரோனா வைரஸ் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது அமைச்சர் பேட்டி


கொரோனா வைரஸ் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 6 Feb 2020 11:51 PM GMT (Updated: 6 Feb 2020 11:51 PM GMT)

கொரோனா வைரஸ் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கொரோனா வைரஸை தடுக்கும் வகையில், ஒவ்வொருவரும் தினமும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளான ஒரு நாளைக்கு 15 முறை கை கழுவுதல், இருமல், தும்மலின் போது முகத்தை மூடிக் கொள்வது, தன் சுத்தம் பேணுதல் போன்ற முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் தமிழகத்தில் முதல்முறையாக கைகழுவும் முறை குறித்து மருத்துவர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு மாதிரி செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அரசு மகளிர் கல்லூரி, மன்னர் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கண்டிக்கத்தக்கது

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களை அழைத்து கொரோனா வைரஸ் சம்பந்தமாக சிகிச்சை அளிக்க வேண்டிய முறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அரசின் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளோம். அண்டை நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என்பது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யார் சொன்னாலும் அது கண்டிக்கத்தக்கது. சித்த மருத்துவம் சார்பில் ஏற்கனவே இது சம்பந்தமான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதேபோல யாரும் கருத்து சொல்ல விரும்பினால் அவர்கள் இந்திய சித்த மருத்துவ கவுன்சிலில் கூறி அவர்கள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடலாம். மக்கள் யாரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஒருபோதும் நம்ப வேண்டாம். அரசு சார்பில் அறிவிக்கப்படும் தகவல்களை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும்.

48 மணி நேரத்தில் முடிவுகள்

ஏற்கனவே இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த தகவல்களை அறிய புனேயில் உள்ள ஆய்வகத்தை அணுக வேண்டிய சூழ்நிலை இருந்தது. தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் பரிசோதனை நிலையத்தில் அமைத்து உள்ளது. இதனால் 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story