வத்திராயிருப்பு யூனியன் அலுவலக தாக்குதல் சம்பவம்: விருதுநகர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வத்திராயிருப்பு யூனியன் அலுவலக தாக்குதல் சம்பவம் குறித்து விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
நான் வத்திராயிருப்பு யூனியன் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எங்கள் கட்சியின் சார்பில் 7 பேர் வெற்றி பெற்றோம்.
பின்னர் வத்திராயிருப்பு யூனியன் தலைவர் தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு எதிராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிந்துமுருகன் என்பவரும் போட்டியிட்டார். இந்த தேர்தலில் எனக்கு 7 வாக்குகளும், சிந்து முருகனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.
இதனை தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் அ.தி.மு.க.வினர் தங்கள் கட்சியை சேர்ந்த சிந்து முருகனைத்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அலுவலகத்துக்கு உள்ளேயே தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
ஆனால் இதனை தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் டி.எஸ்.பி. அ.தி.மு.க.வினருக்கு சாதகமாக செயல்பட்டார்.
இதனை பயன்படுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்த ஆளுங்கட்சியினர் அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் நான் வெற்றி பெற்றதை அறிவிக்கவிடாமல் தடுத்தனர். அந்த கும்பல் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வத்திராயிருப்பு யூனியன் அலுவலகம் தாக்குதல் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து விருது நகர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story