சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட சார்பதிவாளர், வேப்பந்தட்டை சார்பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடி முரசு இஸ்மாயில் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அப்துல்சமது, திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ரபிக்ராஜா, துணைச்செயலாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்கள் கூறுகையில், வேப்பந்தட்டை தாலுகா பெரியம்மாபாளையத்தில் ஜாமியா பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்தை கிரைய ஆவண பத்திரத்தை பதிவு செய்ய வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தோம். அதற்கு அந்த சார்பதிவாளர் லஞ்சம் கொடுத்தால் தான் பதிவு செய்யப்படும் என்று கூறி எங்களை அலைக்கழித்து வருகிறார்.
இது தொடர்பாக நாங்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்தும், வேப்பந்தட்டை சார்பதிவாளர் மீது விசாரணை நடத்தாமல் லஞ்சத்தை ஊக்குவிக்கின்ற மாவட்ட சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினர். மேலும் பள்ளிவாசல் பத்திரத்தை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் முகமது அலி, இளைஞரணி தலைவர் நஜிருதீன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோரும், முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story