மதுரை-ராமநாதபுரம் ரெயில் பாதை மின் மயமாக்கும் திட்ட பணிகள் - அதிகாரிகள் ஆய்வு


மதுரை-ராமநாதபுரம் ரெயில் பாதை மின் மயமாக்கும் திட்ட பணிகள் - அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 7 Feb 2020 1:45 PM IST (Updated: 7 Feb 2020 1:45 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் ரெயில் பாதையை மின்மயமாக்கும் திட்டப்பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம்,

மதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில் பாதையை மின்மயமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மதுரையில் இருந்து மானா மதுரை வரையிலான பகுதியில் மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து மானாமதுரை முதல் மண்டபம் வரையிலான மின் மயமாக்கும் திட்டப்பணிகளுக்கான ஆய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் தென்னக ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் சென்னை தலைமை ரெயில்வே பாதுகாப்பு குழுவினர் அந்த பிரிவின் தலைமை அதிகாரி சித்தார்த்தா தலைமையில் ராமநாதபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் மதுரை ரெயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் மன்சுகானி, கோட்டப்பொறியாளர் (வடக்கு) பாஸ்கர், மதுரை கோட்ட பாதுகாப்பு பிரிவு அதிகாரி மனோகரன், பொறியாளர் பாஸ்கர், மூத்த பொறியாளர் அழகர்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.

இவர்கள் மதுரையில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் மானாமதுரை வந்தனர். அப்போது வரும் வழியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் மற்றும் சுரங்கப்பாதை பாலங்களை ஆய்வு செய்தனர். பின்னர் ராமநாதபுரம் வந்த குழுவினர் ரெயில் நிலையத்தை பார்வையிட்டு கீழக்கரை ரெயில்வே பாலம் கட்டும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம் ரெயில் நிலைய பகுதியில் மின்கம்பிகள் அமைக்கும் வசதிகள், அதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தும் இடங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். ரெயில் நிலைய நடைமேடைகளில் உள்ள மின்கம்பங்கள், சிக்னல் விளக்குகள், அனைத்து மின் பாதைகள் உள்ளிட்டவைகள் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? எனவும் அவர்கள் ஆராய்ந்தனர்.

Next Story