காளை விடும் விழா; தெருவில் ஓடாமல் பார்வையாளர்கள் பக்கம் திரும்பிய மாடுகள்
மருதவல்லிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் விழாவில் பங்கேற்ற மாடுகள் தெருவில் ஓடாமல் பார்வையாளர்கள் பக்கம் சென்று முட்டித்தள்ளியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.
அணைக்கட்டு,
அணைக்கட்டு தாலுகா ஊசூரை அடுத்த மருதவல்லிபாளையம் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு 6-ம்ஆண்டாக நேற்று காளைவிடும் விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஆந்திரா மாநிலத்திலிருந்தும், வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, பள்ளிகொண்டா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் 270 காளைகள் கொண்டு வரப்பட்டன.
காளைகளை அணைக்கட்டு கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார். இதனை தொடர்ந்து காளைவிடும் விழாவை உதவி ஆணையர் பூங்கொடி (கலால்) முன்னிலையில் தாசில்தார் முரளிகுமார், தனிதாசில்தார் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து ஓடின. பார்வையாளர்கள் காளைஓடும் பாதையில் நின்றுகொண்டு கைகளால் காளைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். அப்போது பல காளைகள் தெருவில் ஓடாமல் பார்வையாளர்கள் பக்கம் ஓடின. இதனால் வாலிபர்கள் சிதறி ஓடினார்கள். அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். இவர்களின் 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு காளைவிடும் விழாவில் முகாமிட்டிருந்த மருத்துவ அலுவலர் டாக்டர் கைலாஷ் தலைமையிலான டாக்டர்கள் சீனிவாசன், தீபிகா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 70 ஆயிரம், 2-வது பரிசாக 50 ஆயிரம், 3-வது பரிசாக 40 ஆயிரம் உள்பட 41 பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காணிப்பு பணியில் வருவாய் ஆய்வாளர் தேவிகலா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காளை விடும் நிர்வாக குழுவினர் பாபுஜி, சசிகுமார் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் அதிரடிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story