ராமநகர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் படுகாயம் பசுமாடு செத்தது; ஒரு கார் சேதம்
ராமநகர் அருகே காட்டு யானை தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார். மேலும் ஒரு பசுமாடு செத்ததுடன், காரும் சேதம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.
ராமநகர்,
ராமநகர் மாவட்டம் கே.கொப்பா மற்றும் சவுஹள்ளி கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் கே.கொப்பா, சவுஹள்ளி கிராமங்களுக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததால் மக்கள் பீதி அடைந்தனர். கே.கொப்பா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வரதராஜ சுவாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, கோவில் அருகே வைக்கப்பட்டு இருந்த பொருட்களை மிதித்து சேதப்படுத்தியது. மேலும் கோவில் அருகேயே அந்த காட்டு யானை சுற்றித்திரிந்தது. இதனால் திருவிழாவை நடத்த முடியாமல் கிராம மக்கள் பரிதவித்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த யானையை காட்டுக்குள் விரட்ட கிராம மக்களும் முயன்றனர்.
வாலிபர் படுகாயம்
இதற்கிடையில், கே.கொப்பா கிராமத்தில் இருந்து சென்ற காட்டு யானை, சவுஹள்ளி கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த ஒரு பசுமாட்டை யானை தாக்கி கொன்றது. மேலும் தோட்டத்தின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த காரையும் அந்த காட்டு யானை மிதித்து சேதப்படுத்தியது. இதில், காரின் கண்ணாடிகள் உடைந்ததுடன், காரும் அப்பளம் போல நொறுங்கியது. இதனால் காருக்குள் படுத்திருந்த சுரேஷ்(வயது 30) என்பவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக சுரேசை, கிராம மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கிராமத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். ஒற்றை காட்டு யானை செய்த அட்டகாசத்தால் ஏராளமான பொருட்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து, வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் புகுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story