பட்னாவிஸ் ஆட்சியின் போது பா.ஜனதா தலைவர்களின் போனும் ஒட்டுக்கேட்கப்பட்டது மந்திரி அனில் தேஷ்முக் பேட்டி
மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் பாரதீய ஜனதா தலைவர்களின் போனும் ஒட்டுக்கேட்கப்பட்டது என்று மந்திரி அனில் தேஷ்முக் கூறினார்.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முந்தைய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியின் போது நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மராட்டிய சட்டசபை தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலாளர் ஸ்ரீகாந்த் சிங், நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனர் அமிதேஷ்குமார் ஆகியோர் அடங்கிய இருநபர் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கமிட்டி 6 வாரங்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மந்திரி பேட்டி
இந்தநிலையில், மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியின் போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்களின் போன் அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பல புகார்கள் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தற்போது பாரதீய ஜனதாவை சேர்ந்த தலைவர்களின் போன் அழைப்புகளும் ஒட்டுக்கேட்கப்பட்டு உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் போன் ஒட்டுக்கேக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.
Related Tags :
Next Story