பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில் மோதல்; 11 மாணவர்கள் கைது
பொத்தேரி தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர்,
சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உணவகம் அருகே கடந்த 4-ந்தேதி இருதரப்பு மாணவர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இரு தரப்பு மாணவர்கள் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதனையடுத்து மறைமலைநகர் போலீசார் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களை பற்றி விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மோதிக்கொண்ட இருதரப்பு மாணவர்கள் 2 பேர் தனித்தனியாக மறைமலைநகர் போலீசில் புகார் செய்தனர்.
இந்த புகார்களின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்ட வழக்கில் மவுலா அலி (வயது 21), ராகேஷ் (24), ரஜித் (20), லலித் பிரசாத் (24), கோவிந்தன் (20), விஷ்ணு (24), பென்ரோ (21), பிரவீன் குமார் (20), மாரி கார்த்திக் (19), ஆதித்தியன்(19) மற்றும் 18 வயதான மாணவர் என 11 பேரை மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் நீதிபதி முன் னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story