குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி முஸ்லிம் கூட்டமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
திருவொற்றியூர்
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும், நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் வலியுறுத்தி அனைத்து பள்ளிவாசல் ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் அதன்மீது இதுவரை தமிழக அரசும், அமைச்சர் ஜெயக்குமாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ராயபுரத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதற்காக வெள்ளிக்கிழமையான நேற்று பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியில் வந்த முஸ்லிம்கள் அனைவரும் கல்லறை சாலையில் ஒன்றுகூடினர்.
போலீசார் தடுத்து நிறுத்தினர்
பின்னர் வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையில் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகம் நோக்கி சென்றனர்.
அவர்கள் தமிழக அரசுக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடிசென்றனர். பேரணியாக வந்த முஸ்லிம்களை போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கேயே ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
தாம்பரம்
இதேபோல் தாம்பரம் வட்டார அனைத்து முஸ்லிம் ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி தாம்பரம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர்.
இதற்காக நேற்று தொழுகை முடிந்ததும் தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கி முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர். தாம்பரம் நகராட்சி அலுவலகம் வரை மட்டுமே செல்ல அவர்களை போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து நகராட்சி அலுவலகம் அருகே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story