நாராயணசாமிக்கு ஆளுமை திறன் இல்லை ரங்கசாமி பகிரங்க குற்றச்சாட்டு


நாராயணசாமிக்கு ஆளுமை திறன் இல்லை ரங்கசாமி பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Feb 2020 5:54 AM IST (Updated: 8 Feb 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை திறன் இல்லை என்று ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கலந்துகொண்டு கட்சிக்கொடியேற்றி வைத்து பேசியதாவது:-

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி எதற்கெடுத்தாலும் குறை சொல்லி வருகிறர். அகில இந்திய அரசியல்பேசி புதுவைக்கு என்ன தேவை என்பதை மறந்து மாநில வளர்ச்சியை வீணாக்கிவிட்டார். கடந்த காலங்களில் கேசினோ எனப்படும் சூதாட்ட விடுதிகளை மூட எவ்வளவு கஷ்டப்பட்டோம். மாநிலத்தின் வருமானத்தை பெருக்க சூதாட்ட விடுதி கொண்டுவர போகிறார்களாம்.

சூதாட்டம் மூலம்தான் மாநிலத்துக்கு வருமானம் வரவேண்டும் என்ற நினைப்பே தவறானது. அதேபோல் லாட்டரிசீட்டையும் கொண்டு வரப்போகிறார் களாம். இதெல்லாம் மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் அல்ல. தனி நபர் வளர்ச்சிக்கான திட்டங்கள். புதுவையை வீணாக்கும் திட்டங்கள்.

எதெற்கெடுத்தாலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்க்கட்சிகளையும், கவர்னரையும் குறை சொல்கிறார். கவர்னரின் தொல்லையை நினைத்து ராத்திரியில் தூக்கம் வரவில்லை என்கிறார். அவருக்கு ஆளும் திறமை இல்லை. தனக்கான அதிகாரம் தெரிந்து ஆளவேண்டும்.

நமக்கான அதிகாரத்தை வைத்து வளர்ச்சியை கொண்டுவர வேண்டும் அதுதான் திறமை. அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். மத்திய மந்திரியாக இருந்தபோது கவர்னருக்குத்தான் அதிகாரம், முதல்-அமைச்சருக்கு இல்லை என்று சொன்னவரே இவர்தான்.

இப்போது எதற்கெடுத்தாலும் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுகிறார்கள். உங்கள் திறமைதான் என்ன? கடந்த 2011-ல் கட்சி தொடங்கி ஆட்சி அமைத்தோம். அதேபோல் வருகிற 2021-லும் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம். இந்த வேகத்தோடு பணியாற்றுங்கள்.

மக்கள் நம்மிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். எனவே யாரையும் குற்றம் சொல்லாமல் தேர்தலை நோக்கி பணி செய்யுங்கள். நமது கட்சிக்குத்தான் தனியாக நின்று அதிக வாக்குகள் பெறும் சக்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் உரிய நிலைப்பாட்டை நமது கட்சி எடுக்கும்.

சிலர் கட்சி நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் அளிக்க வேண்டும் என்கின்றனர். ஏற்கனவே சிலருக்கு பொறுப்புகள் வழங்கி தேர்தல் ஆணையத்துக்கு பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்சி பொறுப்புகள் இந்த மாதத்திற்குள்ளாகவே வழங்கப்படும். இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜே.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், சுகுமாரன், கோபிகா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன், புவனேஸ்வரன், காரைக்கால் என்ஜினீயர் ஆனந்தன், டாக்டர் நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story