3 ஆடுகளை கொன்றது நரி ; கண்காணிப்பு கேமராவில் சிக்கியது
ஜோலார்பேட்டை அருகே 3 ஆடுகளை சிறுத்தை கொல்லவில்லை, நரிதான் கொன்றது என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி காமராஜபுரத்தை சேர்ந்தவர் முரளி(வயது 27). அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மற்றும் சின்ன வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த வேடி ஆகியோருக்கு சொந்தமான 3 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் இறந்தது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் ஆடுகளை சிறுத்தைதான் கடித்துள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருப்பத்தூர் உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், வனச்சரக அலுவலர் சோலைராஜன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மர்ம விலங்கு எது என்பதை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராவை கடந்த 5–ந் தேதி பொருத்தி கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது கடந்த தினங்களாக ஆடுகளை கடித்து கொன்றது நரி தான் என தெரிய வந்தது.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் சோலைராஜன் கூறியதாவது:–
திருப்பத்தூர் வட்டம் மண்டலவடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர்புரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் கிராம பகுதியில் உள்ள ஆடுகளை கடித்து காயப்படுத்தி வருவதாகவும் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் வனத்துறை பணியாளர்கள் சிறப்பு ரோந்து மேற்கொண்டனர்.
கால் தடங்களை ஆய்வு செய்தும், கிராம மக்களிடம் விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமரா பொருத்தியும் தொடர்ந்து வன பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. கண்காணிப்பு கேமராவில் நரி நடமாட்டம் இருப்பது பதிவாகி உள்ளது. சிறுத்தை நடமாட்டம் எதுவும் தென்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சம் அடையாமல் இயல்பு நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story