தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி


தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி
x
தினத்தந்தி 9 Feb 2020 4:30 AM IST (Updated: 8 Feb 2020 10:51 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.

திருச்சி,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங் கிணைந்து ‘திருச்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை முன்னாள் மாணவர்கள் சங்கம்’ (தாகா) என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்துள்ளனர். அதன் வெள்ளிவிழா ஆண்டையொட்டி, நேற்று திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘முன்னாள் மாணவர்கள் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

2 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் குமார் தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் மாதவன் வரவேற்று பேசினார். அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலை மகளிர் கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வர் மாசிலாமணி குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், அவர்களின் குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 2020 மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் துணைவேந்தர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகள்

கோவை, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் வேளாண் கல்லூரிகள் இயங்கி வருகிறது. திருச்சியில் இதுவரை 24 வேளாண் தொகுதி மாணவர்களும், 5 தோட்டக்கலை தொகுதி மாணவர்களும் வெளியே சென்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளிலும் மற்றும் வங்கி அதிகாரிகளாகவும், தொழில் முனைவோர்களாகவும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பில் நுழைவுவாயில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்குவதுடன், முன்னாள் மாணவர்களை கொண்டு வழிகாட்டுதல் நிகழ்ச்சி, மருத்துவ உதவி, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளும் ெசய்யப்படுகிறது. மேலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கியும் கவுரவிக்கப்படுகிறார்கள்.

வெளிநாட்டில் பயிற்சி

தோட்டக்கலை கல்லூரி மாணவர்களுக்காக திருச்சி ‘பெல்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 60 முதல் 80 ஏக்கர் பரப்பளவில் பழத்தோட்டம், காய்கறி மற்றும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டு, ஆண்டு தோறும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ேவளாண்மை கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு, விவசாயம் குறித்து நவீன தொழில்நுட்ப பயிற்சிக்காக கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இதுவரை 150 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

வெளிநாட்டில் அவர் களுக்கு வருகிற ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். அதுபோல பேராசிரியர்கள், இணை பேராசிரியர்களும் வெளிநாடு சென்று பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல உலக வங்கி தேவையான நிதி உதவியை அளிக்க முன்வந்துள்ளது.

நெல் ரகம்

வறட்சியை தாங்கும் வகையிலும், நோய் எதிர்ப்பு சக்தி திறன் வாய்ந்த வகையிலான நெல் ரகம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனைக்கொம்பன் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெற்பயிர்களை தாக்கும் நோய்க்கு ‘லட்சுமி வைரஸ்’ என்று இதுவரை பெயரிடவில்லை. அது வதந்தி. களர், உலர் நிலத்தில் விளையக்கூடிய சன்னரக நெல் 2021-ம் ஆண்டில் சாகு படிக்கு வரவாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக முன்னாள் மாணவர் சங்க நிகழ்ச்சி நடக்கிறது. இதில் வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி பங்கேற்கிறார்.

Next Story