கட்சி மேலிடத்தின் கெடுபிடியால் எடியூரப்பா, சுதந்திரமாக முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறார் சித்தராமையா குற்றச்சாட்டு
பா.ஜனதா மேலிட தலைவர்கள் கெடுபிடியால் சுதந்திரமாகவும், சுயமாகவும் முடிவு எடுக்க முடியாமல் எடியூரப்பா திணறி வருவதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
கலபுரகியில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு
“எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நீண்ட இழுபறிக்கு பின்பு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்குவது குறித்தும், ஏற்கனவே உள்ள மந்திரிகளிடம் இருந்துவரும் துறைகளை மாற்றி அமைக்கும் விவகாரம் குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பா இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து இருக்கிறார். இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்து அவர் வெளியே வருவது சுலபம் அல்ல.
மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், மாநிலத்தில் 13 மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மந்திரியாக நியமிக்கப்படவில்லை. மும்பை-கர்நாடக மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் அந்த மாவட்ட மக்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் முதல்-மந்திரி மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த பிரச்சினை கூடிய விரைவில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது.
எடியூரப்பாவை சுதந்திரமாக...
எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நாள்முதல் எதற்கெடுத்தாலும் கட்சி மேலிட தலைவர்களிடம் ஆலோசித்து முடிவு செய்வதாக கூறி வருகிறார். டெல்லிக்கு அடிக்கடி சென்று கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டிய நிலை அவருக்கு இருக்கிறது. மந்திரிசபை விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியாக உள்ளது. கட்சி மேலிட தலைவர்களின் முடிவை எதிர்பார்த்தே எடியூரப்பா காத்திருக்கிறார்.
பா.ஜனதா மேலிட தலைவர்களின் கெடுபிடியால் எடியூரப்பாவால் சுதந்திரமாக செயல்பட முடியாமல் திணறி வருகிறார். முதல்-மந்திரியாக இருந்தாலும், அவரால் சுதந்திரமாகவும், சுயமாகவும் எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. இது மாநிலத்தின் வளர்ச்சி பணிகளை பாதிக்கும். மாநில வளர்ச்சி, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எடியூரப்பா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.”
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story