அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு கோழிகளை திருட முடியாத ஆத்திரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்


அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு கோழிகளை திருட முடியாத ஆத்திரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 9 Feb 2020 5:15 AM IST (Updated: 9 Feb 2020 1:31 AM IST)
t-max-icont-min-icon

லாலாபேட்டை அருகே கோழிகளை திருட முடியாத ஆத்திரத்தில் மர்ம கும்பல் அ.தி.மு.க. பிரமுகரை அரிவாளால் வெட்டியது.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 45). இவர் அ.தி.மு.க. நகர செயலாளராக உள்ளார். இவர் தனது வீட்டின் அருகே பண்ணை தோட்டம் அமைத்து அதில் கோழிகள் மற்றும் கட்டுசேவல்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 6 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து கொண்டு 12 பேர் கொண்ட கும்பல் கோழிகளை திருடுவதற்காக வந்துள்ளனர். பின்னர் அவர்கள் பண்ணை தோட்டத்தில் புகுந்து கோழிகளை திருட முயன்றனர். இதனால் கோழிகள் கத்தின.

இதைக்கேட்டு தூங்கி கொண்டிருந்த வேணுகோபால் எழுந்து வந்து பார்த்தார். அப்போது மர்மநபர்கள் கோழிகளை திருட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதையடுத்து 12 பேரும் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். உடனடியாக வேணுகோபால் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த தனபால் என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு மர்ம நபர்களை தேடி சென்றார்.

அரிவாள் வெட்டு

அப்போது பஞ்சப்பட்டி செல்லும் சாலையில் லெட்சுமணப்பட்டி என்ற இடத்தில் 12 பேரும் மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் தனபாலை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு, வேணுகோபால் மட்டும் தனியாக அவர்களிடம் சென்றார். ஏற்கனவே கோழிகளை திருட முடியாத ஆத்திரத்தில் இருந்த மர்மநபர்கள் வேணுகோபால் தனியாக வருவதை பார்த்ததும் அவரை அரிவாளால் வெட்டியும், கட்டையால் தாக்கி விட்டும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த வேணுகோபால் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

வலைவீச்சு

இதையடுத்து அங்கு வந்த அப்பகுதிமக்கள் அரிவாள் வெட்டு விழுந்த வேணுகோபாலை மீட்டு சிகிச்சைக்காக கிரு‌‌ஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் லாலாபேட்டை போலீசார் வேணுகோபாலின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வேணுகோபால் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தப்பிச் சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கோழிகளை திருட வந்தவர்களை பிடிக்க முயன்ற அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story