முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்
மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மும்பை,
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு நடக்கும் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கோவில்களில் அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது.
முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அன்னதானம்
மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டுப் மேற்கில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று இரவு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செம்பூர் செட்டா நகர் முருகன் கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் தாராவி, சயான், மலாடு உள்ளிட்ட மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தானே, அம்பர்நாத், கல்யாண், வசாய், டோம்பிவிலி, வாஷி, பன்வெல் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர்.
இதேபோல மாட்டுங்கா ஆஸ்திக சமாஜ் முருகன் கோவில், மாகிம் முருகன் கோவில், மலாடு ஒர்லம் சுப்பிரமணியசுவாமி கோவில், டோம்பிவிலி முருகன் கோவில், நெருல் முருகன், வசாய் சன்சிட்டி முருகன், அம்பர்நாத் முருகன் கோவில், ரே ரோடு உள்ளிட்ட மும்பையில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், தமிழர்கள் நிர்வகிக்கும் கோவில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story