வேலூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக 4 லட்சம் பேர் கையெழுத்து


வேலூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக 4 லட்சம் பேர் கையெழுத்து
x
தினத்தந்தி 9 Feb 2020 12:15 AM GMT (Updated: 8 Feb 2020 9:10 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இதுவரை 4 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது என்று ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

வேலூர்,

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கையெழுத்து பெறும் இயக்கம் தமிழகம் முழுவதும் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி- சித்தூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ.வும், வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கதிர்ஆனந்த் எம்.பி.யும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு, வீடாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் சென்று பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

4 லட்சம் பேரிடம்...

நிறைவு நாளான நேற்று காலை வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. மாவட்ட தலைவர் முகமதுசகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி முதல் இதுவரை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 4 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இன்று (நேற்று) வரை பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்து அனைத்தும் தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

இதில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்டு கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெற்றனர்.

கதிர் ஆனந்த் எம்.பி.

அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கதிர்ஆனந்த் எம்.பி. தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

Next Story