ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள அரசு நிலத்தை மீட்க ஏன் தனிப்பிரிவை உருவாக்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி


ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள அரசு நிலத்தை மீட்க ஏன் தனிப்பிரிவை உருவாக்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 8 Feb 2020 10:49 PM GMT (Updated: 8 Feb 2020 10:49 PM GMT)

ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க ஏன் ஒரு தனிப்பிரிவை உருவாக்கக்கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கோவை மாவட்டம், தாத்தா ராவுத்தன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.வி.சுப்பையா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எங்கள் ஊரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ராமராஜ் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சித்தார். இதற்கு எதிராக சப்-கலெக்டர் நடவடிக்கை எடுத்தபோது, நிலத்தின் மீது உரிமை கோரி ராமராஜ், கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் கோவை அரசு பிளடர் தாமோதரன், வழக்கை சரிவர நடத்தவில்லை. இதனால் விரைவில் இந்த வழக் கின் தீர்ப்பை கீழ் கோர்ட்டு பிறப்பிக்க உள்ளது.

அரசு பிளடர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் செய்தேன். இந்த புகார் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும். அரசு புறம்போக்கு நிலம் தொடர்பாக வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க கீழ் கோர்ட்டுக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இடைக்கால தடை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்துக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம் அரசு பிளடரின் செயல் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. நத்தம் புறம்போக்கு நிலத்தில் எந்த ஒரு கட்டுமான பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்று சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, கீழ் கோர்ட்டில் நடைபெறுகிற விசாரணையின்போது அரசு தரப்பில் சரியான விவரங்களை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிக்கை கூட தாக்கல் செய்யவில்லை என்ற நிலையை பார்க்கும்போது, ராமராஜூடன், அரசு பிளடர் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் விதமாக உள்ளது. எனவே, கீழ் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

விழுங்கி விடுவார்கள்

அரசியல் செல்வாக்கு, பணம் பலம், ஆள்பலம் மற்றும் அதிகாரிகளுடன் கூட்டுச்சேர்ந்து பலர் தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்கின்றனர். அதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணமாக உள்ளது. பொது பயன்பாட்டுக்காக உள்ள அரசு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த நிலங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பாளர்கள் விழுங்கி விடுவார்கள்.

எனவே, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர்களை இந்த வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம்.

எவ்வளவு வழக்குகள் உள்ளன?

தமிழகத்தில் மாவட்ட வாரியாக எவ்வளவு அரசு புறம்போக்கு நிலம் உள்ளது? அதில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? அதனை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த நிலம் தொடர்பாக மற்றும் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பாக எவ்வளவு வழக்குகள் உள்ளன? எந்தந்த நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? அரசு நிலத்தை மீட்கும் செயல்களில் ஈடுபடாத அரசு பிளடர்கள், அரசு அதிகாரிகள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

தமிழகம் முழுவதும் உள்ள புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து அவற்றை வேலி அமைத்து பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலங்களை மீட்கவும் ஒரு தனிப்பிரிவை ஏன் அரசு உருவாக்கக்கூடாது? புறம்போக்கு நிலத்தின் விவரங்களை இணையதளத்தில் ஏன் பதிவேற்றம் செய்யக்கூடாது? அவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது அரசு நிலங்கள் எவை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வார்கள் அல்லவா!

தள்ளிவைப்பு

அரசுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்களை, அந்தந்த மாவட்ட பத்திரப்பதிவு அலுவகத்தில் கொடுத்து, இந்த சொத்துகளை எல்லாம் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளதா? அப்படி செய்யவில்லை என்றால், இந்த விவரங்களை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஏன் வழங்கக்கூடாது? இந்த கேள்விகளுக்கு மேற்கண்ட அரசு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கை 3 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story