குமரகோட்டம், குன்றத்தூர் முருகன் கோவில்களில் தைப்பூச விழா


குமரகோட்டம், குன்றத்தூர் முருகன் கோவில்களில் தைப்பூச விழா
x
தினத்தந்தி 8 Feb 2020 11:00 PM GMT (Updated: 8 Feb 2020 11:05 PM GMT)

குமரகோட்டம், குன்றத்தூர் முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடந்தது.

காஞ்சீபுரம்,

கந்தபுராணம் அரங்கேற்றிய புகழ் பெற்ற காஞ்சீபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை முருகபெருமானுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

குன்றத்தூர் முருகன் கோவில்

தைப்பூசத்தையொட்டி குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி கொண்டும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு கட்டண மற்றும் பொது தரிசன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அன்னதானம் செய்தனர்.

அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களின் வசதிக்காக குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து முருகன் கோவில் வரை சிறப்பு மினி பஸ்கள் இயக்கப்பட்டது.

சிங்கப்பெருமாள் கோவில்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட திருத்தேரி பகத்சிங் நகரில் தைப்பூச திருவிழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவிலில் விழா நடைபெற்றது. விரதம் இருந்து வந்த பக்தர்கர் திருத்தேரி சாமூண்டீஸ்வரி அம்மன் குளக்கரையில் இருந்து பால்குடம் மற்றும் காவடி போன்றவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

இதனையடுத்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிப்பட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், கோவில் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.


Next Story