கள்ளக்குறிச்சி அருகே, கிணற்றில் பாய்ந்த குப்பை அள்ளும் வாகனம்; சிறுவன் பலி - தத்தளித்த தாய் மீட்பு


கள்ளக்குறிச்சி அருகே, கிணற்றில் பாய்ந்த குப்பை அள்ளும் வாகனம்; சிறுவன் பலி - தத்தளித்த தாய் மீட்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 5:00 AM IST (Updated: 9 Feb 2020 10:59 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே குப்பை அள்ளும் வாகனம் கிணற்றில் பாய்ந்தது. இதில் சிறுவன் பலியானான். தண்ணீரில் தத்தளித்த அவனது தாய் மீட்கப்பட்டார்.

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி வனிதா(வயது 25). துப்புரவு தொழிலாளி. இவர்களுக்கு ஜனனி என்கிற ஒரு மகள் உள்ளார். பாலாஜி(6) என்கிற மகனும் இருந்தான். பாலாஜி அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் க.அலம்பலம் கிராமத்தில் குப்பைகள் அள்ளுவதற்காக கள்ளக்குறிச்சி ஒன்றியம் சார்பில் கடந்த வாரம் பேட்டரியால் இயங்கும் வாகனம் ஒன்று வழங்கப்பட்டது. அந்த வாகனத்தை வனிதா ஓட்டிப்பழக முடிவு செய்தார். அதன்படி நேற்று மதியம் 1 மணிக்கு அவர், தனது மகன் பாலாஜியை அந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்குள்ள பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பள்ளிக்கூடம் அருகே சென்றபோது வனிதாவின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தறிகெட்டு ஓடி சாலையோரத்தில் உள்ள 50 அடி ஆழ தரை விழுந்த கிணற்றில்பாய்ந்தது. இதில் வாகனத்துடன் இருவரும் கிணற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் வனிதா, கிணற்றின் பக்கவாட்டில் உள்ள கற்களை பிடித்துக்கொண்டு, வெளியே வரமுடியாமல் தத்தளித்தார். ஆனால் சிறுவன் பாலாஜி தண்ணீரில் மூழ்கினான்.

உடனே வனிதா காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினார். இவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் ஓடிவந்து பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி வனிதாவை மீட்டனர். இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி பாலாஜியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெகுநேரமாகியும், அவன் கிடைக்கவில்லை.

இதனிடையே கிணற்றில் மூழ்கிக்கிடந்த குப்பை அள்ளும் வாகனம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு பாலாஜி பிணமாக மீட்கப்பட்டான். பின்னர் அவனது உடல் கச்சிராயப்பாளையம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாலாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story