2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2020 12:15 AM GMT (Updated: 9 Feb 2020 5:43 PM GMT)

2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாய பெருவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக மக்களின் நலனை குறிக்கோளாக கொண்டு புதிய திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கறவை மாடு, ஆடு உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த அரசும் அதை பின்பற்றி வருகிறது. கால்நடைகளுக்காக ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.

நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில் உலக தரம் வாய்ந்த கால்நடை ஆராய்ச்சி மையம், மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும். கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த 2016-2020 ஆண்டுகளில் ரூ.4,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர் கால்நடைகளை தனது குடும்ப உறுப்பினராக பாவித்து வருகின்றனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது போயஸ்கார்டன் இல்லத்தில் 14 நாய்களை செல்லமாக வளர்த்தார். அவைகளை குடும்ப உறுப்பினராக பாவித்து அன்பு காட்டினார். அவர் முதல்-அமைச்சராக இருந்த போது ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கு செல்ல திட்டமிட்டார். அப்போது வீட்டில் வளர்த்து வந்த ஜூலி என்ற நாய் இறந்துவிட்டது என்ற செய்தியை கேட்டதும் டெல்லி செல்வதை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் அவர் அந்த நாயை வீட்டிலேயே அடக்கம் செய்தார். இதன் அடிப்படையில் தான் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் மற்றும் மிருகவதை கூடாது என அறிவித்தார்.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

இந்த அரசு அனைத்து திட்டங்களையும் முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. இதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாராட்டவும் மனமும் வரவில்லை. கடந்த தேர்தலின் போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களிடம் ‘நீங்கள் செய்வீர்களா’ என்று பேசினார். இதை மக்களும் ஏற்றுக் கொண்டதால் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால் இந்த செயலை மு.க.ஸ்டாலின் கிண்டல் செய்ததால் அவர் தோல்வி அடைந்தார். வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், அதற்கு முன்பாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த விழாவில் தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் அஞ்சலை, தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன், தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ரமணன், பெரியேரி ஊராட்சி தலைவர் சேகர், பெரியேரி ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர், தலைவாசல் ஊராட்சி தலைவர் ஆறுமுகம், சேலம் ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு, ஆவின் மாவட்ட தலைவர் ஜெயராமன்,

துணைத்தலைவர் ஜெகதீசன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் லிங்கம்மாள், துணைத்தலைவர் கன்னியப்பன், பெத்தநாயக்கன்பாளையம் குழு தலைவர் சின்னதம்பி, துணைத்தலைவர் கே.பி.முருகேசன், உடையாப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் அருண்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மெடிக்கல் ராஜசேகரன், உமையாள்புரம் கூட்டுறவு சங்க தலைவர் வாசுதேவன், தாகூர் கல்வி நிறுவன சேர்மன் லட்சுமி நாராயணன், பாரதியார் கல்வி நிறுவன செயலாளர் டாக்டர் ஏ.கே.ராமசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஜெயகாந்தன், பி.எஸ்.டி. என்ஜினீயரிங் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாக இயக்குனர் வி.எஸ்.தென்னரசு, சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story