கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத மாமனாரை கண்டித்து பெண் போராட்டம்


கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத மாமனாரை கண்டித்து பெண் போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2020 4:00 AM IST (Updated: 10 Feb 2020 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத மாமனாரை கண்டித்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தோகூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது 75). திருவெறும்பூரில் உள்ள பாய்லர் ஆலை நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள். 3 மகள்கள்.

இவரது மூத்த மகன் மூர்த்தி (45). இவர் கடந்த 1996-ம் ஆண்டு அதே தெருவை சேர்ந்த வீரமணி மகள் கவிதா(35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் திருமணத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏற்றுக்கொள்ளவில்லை

இதனால் மூர்த்தி, கவிதாவுடன் திருச்சி அருகே உள்ள குமரேசபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக மூர்த்தி வேலை பார்த்து வந்தார். மூர்த்தி-கவிதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

திருமணம் முடிந்து பல ஆண்டுகளான பின்னரும் மூர்த்தி, கவிதாவை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். அவருக்கான இறுதி சடங்குகளை அவருடைய தந்தை முருகேசன் வீட்டில் வைத்து செய்ய கவிதா முடிவு செய்தார்.

போராட்டம்

அதன்படி மூர்த்தியின் உடலுடன் தோகூரில் உள்ள அவருடைய தந்தை முருகேசன் வீட்டுக்கு கவிதா நேற்று வந்தார். அப்போது முருகேசனின் வீடு பூட்டி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காமல் வீட்டை பூட்டி சென்ற மாமனாரை கண்டித்து அங்கு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து தோகூர் போலீசார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவிதாவை சமாதானம் செய்தனர். இதனால் போராட்டத்தை அவர் கைவிட்டார்.

பரபரப்பு

பின்னர் மூர்த்தியின் உடலுக்கு அந்த இடத்திலேயே இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத மாமனாரை கண்டித்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story