காவேரிப்பட்டணம் அருகே 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு


காவேரிப்பட்டணம் அருகே 650 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 4:30 AM IST (Updated: 10 Feb 2020 2:32 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே 650 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சாள மன்னர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் ஒன்றியம் என்.தட்டக்கல் ஊர்கவுண்டர் சக்ரவர்த்தி மற்றும் விவசாய சங்கத்தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கொடுத்த தகவலின்படி, கிரு‌‌ஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வரலாற்று ஆய்வுக் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் தலைமையில் என்.தட்டக்கல் கிராமத்தில், ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 650 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சாள மன்னர் கால கல்வெட்டு ஒன்றை ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வில் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆய்வாளர்கள் சதாநந்த கிரு‌‌ஷ்ணகுமார், சுகவனமுருகன், கணேசன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நில தானம்

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், இந்த கல்வெட்டு பழைய கோவிலின் கோணாவிட்டமாக (மேற்கூரையில் உள்ள கல்) பயன்படுத்தி இருந்ததாக மக்கள் கூறினர். இந்த கோவில் அருகே புதிதாக ராமநாதேஸ்வரர் கோவில் ஒன்று இருப்பதையும், அங்கு ஒரு பழமையான லிங்கம் இருப்பதையும் காணமுடிகிறது. இந்த கல்வெட்டில், ஒய்சாள மன்னன் வீரராமநாதனின் ஆட்சி காலத்தில், அதாவது கி.பி. 1287-ல் நில தானம் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. தட்டக்கல் என்று இன்று அழைக்கப்படும் இந்த ஊர் 650 ஆண்டுகளுக்கு முன் இக்கல்வெட்டில் தத்தக்கல் என்று அழைக்கப்பட்டு இருந்தது தெரிய வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த கல்வெட்டை மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வையிட்டனர்.


Next Story