ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது - பெரியவெங்காயம் கிலோ ரூ.28-க்கு விற்பனை


ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது -  பெரியவெங்காயம் கிலோ ரூ.28-க்கு விற்பனை
x
தினத்தந்தி 10 Feb 2020 3:30 AM IST (Updated: 10 Feb 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் வரத்து அதிகரித்ததால் காய்கறி விலை குறைந்தது. பெரியவெங்காயம் ஒரு கிலோ ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை,

கோவையில் மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். மார்க்கெட், டவுன்ஹால் தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகள் உள்ளன. இதுதவிர விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த காய்கறிகளை ஆர்.எஸ்.புரம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

கோவைக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து சரக்கு வேன்கள் மூலம் தக்காளி எடுத்துவரப்படுகிறது. இது போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்தரிக்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

இதனால் கோவைக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்து உள்ளது. இதுகுறித்து கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயி ஒருவர் கூறிய தாவது:-

கோவையில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் பனிப்பொழிவு குறைவு. இதனால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட வில்லை. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து அதிகரித்து, விலை குறைந்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரை விற்ற சின்னவெங்காயம் தற்போது ரூ.36 முதல் ரூ.40 வரையும், கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்ற பெரிய வெங்காயம் ரூ.28 முதல் ரூ.30 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்று பிற காய்கறிகளின் விலை விவரம் (கிலோ) வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் பழைய விலை)

புடலங்காய் ரூ.10 (ரூ.20), முட்டைக்கோஸ் ரூ.12 (ரூ.18), நாட்டு தக்காளி ரூ.12 (ரூ.40), ஆப்பிள் தக்காளி ரூ.16 (ரூ.45), பாகற்காய் ரூ.18 (ரூ.30), சுரைக்காய் ரூ.10 (ரூ.20), பீன்ஸ் ரூ.36 (ரூ.45), பீட்ரூட் ரூ.26 (ரூ.35).

உருளைக்கிழங்கு ரூ.40 (ரூ.45), பச்சை மிளகாய் ரூ.20 (ரூ.25) முள்ளங்கி ரூ.12-க்கு (ரூ.20) விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக கேரட் மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Next Story