ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.7 கோடி மதிப்பில் 2,500 பேருக்கு தாலிக்கு தங்கம் - பெண்கள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2019) ரூ.7 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 500 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு உள்ளது. திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் பெற்றது மகிழ்ச்சிக்கு உரியது என்று பெண்கள் தெரிவித்தனர்.
ஈரோடு,
தமிழகத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, பெண்கள் முன்னேற்றத்தில்அதிக அக்கறை செலுத்தினார். பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த அவர், பெண் கல்வியுடன், அவர்களின் திருமண சுமையையும் குறைக்கும் வகையில் கொண்டு வந்த திட்டம் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டம். கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் முறையாக நடந்து வருகிறது.
அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் 2011-ம் ஆண்டு முதல் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நடந்து வருகிறது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டில் 2ஆயிரத்து 500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் ரூ.6 கோடியே94 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டு உள்ளது. பட்ட படிப்பு படித்த 1,721 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.8 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரமும், பட்டம் பெறாத 779 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 94 லட்சத்து 75 ஆயிரம் என மொத்தம் ரூ.10 கோடியே 55 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை பெற்ற பெண்களின் பெற்றோர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மனைவி செல்வி என்ற பெண் கூறியதாவது:-
நானும் எனது கணவரும் தறிப்பட்டறை தொழிலாளிகள். எனது மகள் பிரியா, 12-ம் வகுப்பு படித்து உள்ளார். அவருக்கு திருமணம் நிச்சயமானது. தமிழகஅரசின் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு விண்ணப்பம் செய்து இருந்தேன். அதைத்தொடர்ந்து திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம், தாலிக்கு தங்கம் ஒரு பவுன் தங்கக்காசு கிடைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில், முதல் -அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை-எளிய மக்கள் மீது பரிவுடன் இந்த திட்டத்தை நிறைவேற்றி வருவதால், எங்களைப்போன்ற ஏழைகளுக்கு நிதி மற்றும் தங்கக்காசு முறையாக கிடைத்து வருகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.
சங்குநகர் பகுதியை சேர்ந்த பஷீர் என்பவருடைய மனைவி யாஸ்மின் கூறும்போது, எனது மகள் ரேஷ்மாவின் திருமணத்துக்காக தமிழக அரசுரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கக்காசு தந்து மிகப்பெரிய சிரமத்தில் இருந்து மீட்டு உள்ளது. முதல்-அமைச்சருக்கு நன்றி என்றார்.
வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி ஸ்ரீலதா என்பவர் கூறியதாவது:-
எனது கணவர் இறந்து விட்டார். நான் ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்துஎனது குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனது மகள் பவித்ரா என்ஜினீயரிங் பட்டம் பெற்று உள்ளார். அரசின் நலத்திட்ட உதவிகள், எனது கடின உழைப்பின் மூலமாக என்ஜினீயரிங் படிக்க வைத்தேன். எனக்கு இன்னொரு மகனும் இருக்கிறார். இந்தநிலையில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க மிகவும் சிரமப்பட்டேன். தமிழக அரசு வழங்கும் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம்என்பது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. தாயுள்ளத்துடன் தாலிக்கு தங்கம் வழங்கி, என்னைப்போன்ற ஏழை குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமண வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றும் தமிழக முதல்-அமைச்சர், தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 2011-ம் ஆண்டு முதல்2019 வரை 24 ஆயிரத்து 199 பெண்கள் தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் தங்கக்காசு, நிதி உதவி பெற்று இருக்கிறார்கள். இதில் பட்டதாரிகள் 13 ஆயிரத்து 657 பேர். பட்டம் பெறாதவர்கள் 10 ஆயிரத்து 542 பேர். மொத்தமாக இதுவரை ரூ.94 கோடியே 65 லட்சம் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. தங்கக்காசுகள் 119 கிலோ 680 கிராம் அளவுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story