திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்; சிதறி ஓடிய வீரர்கள் - 26 பேர் காயம்


திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்; சிதறி ஓடிய வீரர்கள் - 26 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Feb 2020 11:00 PM GMT (Updated: 9 Feb 2020 11:53 PM GMT)

திண்டுக்கல் அருகே மறவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முடியாமல் வீரர்கள் சிதறி ஓடினர். இதில் 26 பேர் காயமடைந்தனர்.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டியில், புனித பெரிய அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக ஊர் அழைப்பு மற்றும் பரிசுப்பொருட்கள் அழைப்பு நடந்தது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, விராலிமலை, மணப்பாறை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புகையிலைப்பட்டி, கொசவபட்டி, முத்தழகுபட்டி, மைக்கேல்பாளையம், தவசிமடை, பஞ்சம்பட்டி உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் இறக்கப்பட்டன.

வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. அந்த காளைகளை அடக்குவதற்காக 500-க்கும் மேற்பட்டோர் களம் இறங்கினர். இவர்கள், 75 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் காளைகளை பிடிக்க மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளை அடக்க காளையர்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதேநேரத்தில் சில காளைகளின் பெயர்களை, அறிவிப்பாளர் அறிவித்தவுடன் மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பதுங்கினர். சில காளைகள் மைதானத்திற்குள் வந்ததும் நிதானமாக நின்று சுற்றும், முற்றும் பார்த்தபடி தனது கொம்புகளை ஆட்டி மாடுபிடி வீரர்களை மிரட்டின.

சீற்றத்துடன் சீறிப்பாய்ந்த சில காளைகளை பார்த்து மாடுபிடி வீரர்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினர். மேலும் தங்களை பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்களை, சில காளைகள் கொம்புகளால் முட்டி பந்தாடின. சாதுரியமாக செயல்பட்டு சில காளைகளை வீரர்கள் அடக்கினர்.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளைகள், வீரர்களை முட்டி விரட்டும் சமயங்களில் போட்டி அறிவிப்பாளர் கூடுதல் பரிசுகளை அறிவித்தார். அப்போது பார்வையாளர்கள் ஒலி எழுப்பியும், விசில் அடித்தும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளிக்காசுகள், பட்டுசேலைகள், பீரோக்கள், சைக்கிள், கட்டில்கள், எவர்சில்வர் குடம், அண்டா, பானை, குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

உற்சாகத்துடனும், பரபரப்புடனும் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 13 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 12 பேர் மற்றும் ஒரு பார்வையாளர் என மொத்தம் 26 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சீனிவாசன், சிவசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் படுகாயம் அடைந்த தவசிமடையை சேர்ந்த குழந்தைராஜ் (வயது 25), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சவுந்தர் (21), மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுதன்பிரபு (27) உள்ளிட்ட 5 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு தாசில்தார் பாண்டியம்மாள், மறவபட்டி பங்குத்தந்தை லியோஜோசப், தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், அகரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அகரம் சக்திவேல், தாடிக்கொம்பு பேரூராட்சி முன்னாள் தலைவர் முத்துராஜ், தாடிக்கொம்பு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் முத்தையா, அ.தி.மு.க. பிரமுகர் ராஜசேகர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜல்லிக் கட்டு ஏற்பாடுகளை மறவபட்டி ஊர் பெரியதனக் காரர்கள், விழா குழு வினர் செய்திருந்தனர்.

Next Story