திருமங்கலம் அருகே, பெட்ரோல்-டீசல் பதுக்கிய கூடாரத்தில் தீ விபத்து - ஒருவர் பலி; 4 பேர் உடல் கருகினர்


திருமங்கலம் அருகே, பெட்ரோல்-டீசல் பதுக்கிய கூடாரத்தில் தீ விபத்து - ஒருவர் பலி; 4 பேர் உடல் கருகினர்
x
தினத்தந்தி 11 Feb 2020 5:00 AM IST (Updated: 10 Feb 2020 10:27 PM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பெட்ரோல், டீசலை பதுக்கி வைத்து இருந்த கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர்.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம், திருமங்கலம், கப்பலூர் அருகே உள்ள சொக்கநாதன்பட்டி பிரிவில் பல்வேறு இடங்களில் இருந்து திருட்டுத்தனமாக பெறப்பட்ட பெட்ரோல்- டீசலை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக தகரத்தால் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. கூடாரத்திற்குள் கேன்களில் மண்எண்ணெய், டீசல், பெட்ரோல் இருந்துள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் கூடாரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கூடாரத்திற்குள் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்கள் திருமங்கலம் தீயணைப்புதுறை மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறையினரும், திருமங்கலம் போலீசாரும் விரைந்து வந்து தீ விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்டு தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த பூச்சி மகன் கணேசன் (வயது40) சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

மேலும் கப்பலூரைச் சேர்ந்த ஆசைத்தம்பி (50), கார்த்திக் (23), கரடிக்கல்லை சேர்ந்த விஜயகுமார்(38), ஆறுமுகம் (66) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள எண்ணெய் நிறுவனம் அருகே 4 பெட்ரோல் கேன்கள் மற்றும் 8 காலி கேன்களுடன் பதிவு எண் இல்லாத வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்தது.

கூடாரத்தில் பதுக்கி வைத்திருந்த டீசல், பெட்ரோல் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும், இந்த கூடாரத்திற்கு உரிமையாளரான முத்தையா பற்றியும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story