திருச்செந்தூரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி: பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரிக்கை


திருச்செந்தூரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி: பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 5:30 PM GMT)

திருச்செந்தூரில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். எனவே பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன்படி நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களின் கழிவுநீரை பாதாள சாக்கடை குழாயில் இணைத்து, அவற்றை தோப்பூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரித்து, ஆவுடையார்குளம் மறுகால் வாய்க்கால் வழியாக கடலில் கலக்க விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக அனைத்து தெருக்களின் நடுவிலும் சுமார் 15 அடி ஆழத்தில் ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு, அதன் வழியாக கழிவுநீரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ஆங்காங்கே பாதாள சாக்கடை இணைப்பு தொட்டிகளும் அமைக்கப்பட்டது. இதற்கிடையே பாதாள சாக்கடை இணைப்பு தொட்டிகளில் அடிக்கடி கழிவுநீர் நிரம்பி வெளியேறுவதால், வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வழியில் சபாபதிபுரம் தெருவில் பழைய கோவில் போலீஸ் நிலையம் முன்புள்ள பாதாள சாக்கடை இணைப்பு தொட்டியில் கழிவுநீர் நிரம்பி, சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு குளம் போன்று கழிவுநீர் தேங்கியதால், சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. கோவிலுக்கு செல்லும் பஸ், கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த கழிவுநீரின் வழியாகவே ஊர்ந்து செல்கின்றன.

பாதாள சாக்கடை குழாயில் சிலர் முறைகேடாக தங்களது வணிக நிறுவனங்களின் கழிவுநீரை இணைப்பதால், அவை வெளியேற முடியாமல், பாதாள சாக்கடை இணைப்பு தொட்டி வழியாக வெளியேறுகிறது. எனவே பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை குழாயில் முறைகேடாக பெற்ற இணைப்புகளை துண்டித்து, கழிவுநீரை முறையாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story