காதல் திருமணம் செய்த மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற தொழிலாளி போலீசார் வலைவீச்சு


காதல் திருமணம் செய்த மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற தொழிலாளி போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Feb 2020 12:30 AM GMT (Updated: 10 Feb 2020 6:49 PM GMT)

ஒரத்தநாடு அருகே குடும்ப தகராறு காரணமாக காதல் திருமணம் செய்த மனைவியை கத்தரிக்கோலால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 40). இவருடைய மனைவி சங்கீதா(35). இவர்கள் இருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இளையராஜா சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். சங்கீதா தனது தாய் வீட்டில் மகன்-மகளுடன் வசித்து வந்தார்.

செல்போனில் தொடர்பு

இளையராஜாவுக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த இளையராஜா தனது மனைவி சங்கீதாவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது சங்கீதாவின் செல்போன் எண் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் தனது மனைவியை இளையராஜா செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது கணவன்-மனைவி இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கத்தரிக்கோலால் குத்தினார்

இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது மாமியார் வீட்டுக்கு சென்ற அவர், தனது மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இளையராஜா அருகே இருந்த கத்தரிக்கோலை எடுத்து சங்கீதாவை குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பரிதாப சாவு

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சங்கீதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story