அரிச்சல்முனை சாலை வளைவு பகுதியை விரைவாக சீரமைக்க கோரிக்கை
2 மாதத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாததால் அரிச்சல்முனை சாலை வளைவு பகுதியை விரைவில் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதி, இயற்கையாகவே கடல் அலைகள் வேகமாகவும் நீரோட்டம் அதிகமாகவும் உள்ள பகுதியாகும். ஆனால் கடந்த சிலமாதங்களாக தொடர்ந்து இந்த பகுதியில் கடல் கொந்தளிப்பு, நீரோட்டத்தின் வேகம் அதிகரித்ததால், அரிச்சல்முனை கடற்கரை சாலையில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் உள்பட பல இடங்கள் பலத்த சேதமடைந்தன.
இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் நீரோட்டத்தின் வேகம் குறையாததால் அரிச்சல்முனை சாலையின் வாகனங்கள் வந்து திரும்பி செல்லும் வளைவு மற்றும் சாலையின் அடிப்பகுதி ஆகியவை கடல் அரிப்பால் முழுமையாக அரித்து சேதமாகியுள்ளதோடு உறுதித் தன்மையும் குறைந்து வருவதாக தெரியவருகிறது.
ஒரே நேரத்தில் அதிகமான வாகனங்கள் அரிச்சல்முனை சாலையின் வளைவில் நிறுத்தப்படும் பட்சத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 மாதங்களாக தனுஷ்கோடி வரும் அரசு பஸ் உள்பட அனைத்து வாகனங்களும் அரிச்சல்முனை வரை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே அனைத்து வாகனங்களும் போலீசாரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கடந்த 2 மாதங்களாக தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகள், வயதானவர்களுடன் அரிச்சல்முனை சாலை வரை ஒரு கிலோ மீட்டர் தூரம் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சென்று பார்த்து வருகின்றனர். கடல் அரிப்பால் உறுதித் தன்மை குறைந்து வரும் தடுப்பு சுவர் சாலையின் வளைவை சீரமைக்க சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அரிச்சல்முனை சாலை வளைவு மற்றும் தடுப்பு சுவரின் உறுதித் தன்மையை அதிகரிக்கும் வகையிலான சீரமைப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் பணியை விரைந்து தொடங்கி வேகமாக முடித்து வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் அரிச்சல்முனை வரை சென்று திரும்ப, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story