பாலியல் தொந்தரவால் மாணவி தற்கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பாலியல் தொந்தரவு செய்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை,
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை அடுத்த வெள்ளாள வயல் கிராமத்தை சேர்ந்தவர் பச்சைமுத்து என்ற ராஜா (வயது 32). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கையை அடுத்த அரசனேரி கீழமேடு கிராமத்திற்கு கூலிவேலைக்கு வந்தார். அப்போது அவர் அந்த கிராமத்தில் வசித்த 13 வயது சிறுமி ஒருவரின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டார்.
அந்த சிறுமி சிவகங்கையில் உள்ள ஒருதனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு சென்ற பச்சைமுத்து தொடர்ந்து செல்போன் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த சிறுமி 17.12.2013 அன்று வீட்டில் மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி பச்சைமுத்துவை கைது செய்தனர்.
அவர் மீது சிவகங்கையில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் குற்றம் சாட்டப்பட்ட பச்சைமுத்து என்ற ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story