சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த வாலிபரின் இதயம்


சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த வாலிபரின் இதயம்
x
தினத்தந்தி 11 Feb 2020 12:15 AM GMT (Updated: 10 Feb 2020 8:12 PM GMT)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் நேற்று சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

சேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் அருகே உள்ள கீழநாரியனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மனைவி ராணி. இவர்களுடைய 2-வது மகன் சுரேந்தர்(வயது 20). டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ள இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் மேற்பார்வையாளராக பணியாற்றினார்.

இவர் கடந்த 8-ந் தேதி கீழநாரியனூரில் உள்ள தனது பெற்றோரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வாழப்பாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வாழப்பாடி அருகே பெரியகவுண்டாபுரம் பகுதியில் வந்த போது அவர் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மூளைச்சாவு

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையில் அவருடைய பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதுபற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினரிடம் பெற்றோர் ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து சுரேந்தரின் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை சென்னைக்கும், மற்ற உறுப்புகளை கோவை, சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு காலை 11.45 மணிக்கு செல்லும் விமானத்தில் இதயம், நுரையீரலை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. சேலத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காமலாபுரத்திற்கு விரைவில் கொண்டு செல்லும் வகையில் சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமாரிடம் கேட்டுக் கொண்டனர். இதற்கு உரிய ஏற்பாடு செய்து கொடுப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த சுரேந்தரின் இதயம், நுரையீரலை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக நேற்று காலை 10.30 மணிக்கு டாக்டர் குழுவினர் அறுவை சிகிச்சையை தொடங்கினர். பின்னர் உடல் உறுப்புகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இதயம் மற்றும் நுரையீரலை மருத்துவ குழுவினர் பாதுகாப்பான பெட்டியில் வைத்து ஏற்கனவே தயாராக இருந்த ஆம்புலன்சில் காலை 11.11 மணிக்கு ஏற்றி காமலாபுரம் விமான நிலையத்துக்கு புறப்பட்டனர்.

இந்த ஆம்புலன்சுக்கு முன்னால் வி.ஐ.பி.களுக்கு செல்லும் பாதுகாப்பு வாகனம் சென்றது. இந்த ஆம்புலன்ஸ் முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை வழியாக சென்று 11.29 மணிக்கு காமலாபுரம் விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்கிடையில் பயணிகள் அனைவரும் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டு அங்கு விமானம் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

விமானத்தில் பறந்தது

இதையடுத்து மருத்துவ குழுவினர் விமானத்தில் வாலிபரின் உடல் உறுப்புகளை ஏற்றினர். சென்னை செல்லும் அதே விமானத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் ஏறினார். பின்னர் அங்கிருந்து 11.40 மணிக்கு விமானம் புறப்பட்டு 12.50 மணிக்கு சென்னையை சென்றடைந்தது. மேலும் சுரேந்தரின் கண் மற்றும் கல்லீரல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், ஒரு சிறுநீரகம் கோவை அரசு கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், மற்றொன்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது. தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகிகள் தெரிவித்தனர்


Next Story