புதிதாக கட்டப்பட்ட முண்டந்துறை பாலம் திறக்கப்படுவது எப்போது? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு


புதிதாக கட்டப்பட்ட முண்டந்துறை பாலம் திறக்கப்படுவது எப்போது? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 11 Feb 2020 4:00 AM IST (Updated: 11 Feb 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக கட்டப்பட்ட முண்டந்துறை பாலம் திறக்கப்படுவது எப்போது? என்று பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நெல்லை, 

தென்தமிழக மக்களுக்கு குடிநீர் வழங்கி வற்றாத ஜீவ நதியாகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் நதியாகவும் உள்ள தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிற இடம், பாபநாசத்திற்கு மேல் உள்ள பொதிகை மலையாகும். இந்த பொதிகை மலை அருகே தான் பாபநாசம் காரையாறு அணைக்கட்டு உள்ளது. இதன் அருகில் பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மின்சாரம் உற்பத்தியாகும் சேர்வலாறு அணை, முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன.

அந்த இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டுமானால் பாபநாசத்தில் இருந்து மலைப்பாதையில் செல்லவேண்டும். இந்த மலைப்பாதையில் முண்டந்துறை என்ற இடத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் இருந்தது. இந்த பாலமானது வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் 1938-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பாலம் எதற்காக கட்டப்பட்டது என்றால் பாபநாசம் காரையாறு அணை கட்டும் பணிக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்காக கட்டப்பட்டது. இதன் வழியாக தான் பஸ், வேன்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்று வந்தன.

கடந்த 1992-ம் ஆண்டு பெய்த கனமழையில் பாபநாசம் அணையில் இருந்தும், காட்டுப்பகுதியில் இருந்தும் அதிக அளவில் வெள்ளம் வந்தது. இந்த வெள்ளத்தில் காட்டு மரத்தடிகள், பாறைகள் எல்லாம் அடித்து வரப்பட்டது. அப்போது முண்டந்துறை ஆற்றுப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஒரு மாத காலம் போக்குவரத்து தடைப்பட்டது.

உடனே மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் தற்காலிகமாக பாலம் அமைத்து கொடுத்தது. இதைத்தொடர்ந்து மீட்பு பணிக்கு வந்த இந்திய ராணுவத்தினர் மாவட்ட நிர்வாகம் அமைத்து கொடுத்த தற்காலிக பாலத்தின் மேலே ஒரு இரும்பு பாலம் அமைத்து கொடுத்தனர். இந்த இரும்பு பாலத்தின் வழியாக தான் தற்போது அனைத்து வாகனங்களும் சென்று வந்து கொண்டு இருக்கிறது. மழைக்காலங்களில் இந்த இரும்பு பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் ஓடும். அப்போது போக்குவரத்து தடைபடும்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் இருந்த அதே இடத்தில் மீண்டும் பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த பாலத்தை கட்ட 26 வருடங்களுக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, வனத்துறை ஆகியவை அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து 7½ மீட்டர் அகலத்திலும், 82 மீட்டர் நீளத்திலும் ரூ.7 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதலில் பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்தது. அதன்பிறகு பணிகள் மந்தம் அடைந்தது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் கட்டுமான பணி மீண்டும் மும்முரமானது. தற்போது பாலம் கட்டுமான பணி முழுமையடைந்து விட்டது. பாலத்தின் இருபுறங்களிலும் சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் பாலம் உள்ளது. பாலத்தில் வெள்ளை அடித்து வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. எனவே புதிய பாலம் திறக்கப்படுவது எப்போது? என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பாபநாசம் முண்டந்துறையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பாலம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் விரைவில் காணொலி காட்சி மூலம் பாலத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது’ என்றனர்.

Next Story