கணபதிபாளையத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்கக்கோரி கிராமமக்கள் மனு


கணபதிபாளையத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்கக்கோரி கிராமமக்கள் மனு
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 8:32 PM GMT)

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கணபதிபாளையத்தில் உள்ள செங்கல் சூளை களுக்கு தடைவிதிக்கக்கோரி கிராமமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 263 மனுக்களை பெற்றார். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

அரசு பள்ளியில் இடைநிற்றல் அதிகரிப்பு

கரூர் மாவட்டம் பொரணி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் விவேகானந்தன் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் மாவட்டம் பொரணி அரசு உயர்நிலைப்பள்ளியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பலர் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா குடல்வால் அறுவை சிகிச்சைக்காக 10 நாட்கள் விடுப்பு எடுத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு வந்த அந்த மாணவி சில காரணங்களால் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று வருகிறார். இது போல் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இது குறித்து விசாரித்த போது தான், அரசு பள்ளியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு இத்தகைய நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரிய வருகிறது. பள்ளியில் கழிவறை பராமரிப்பின்றி உள்ளது. குடிநீரும் சரிவர பள்ளியில் வினியோகம் இல்லை. எனவே இது பற்றி பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செங்கல்சூளை புகையினால் மக்கள் அவதி

மண்மங்கலம் வட்டம் வா.குப்புச்சிப்பாளையம் ஊராட்சி கணபதிபாளையம்கிராமமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் விதிமுறைகளை மீறி 2 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சூளை வைக்கிற போது விறகுகள் வைத்து எரித்து திறந்தவெளியில் கரும்புகையினை பரப்பி விடுவதால் வீடுகளை புகை சூழ்ந்து கொள்கிறது. அதனால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த செங்கல்சூளைகளில் இயக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலையொட்டிய பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. அதனை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

திறன்போட்டிகள்

கூட்டத்தின்போது, சர்வதேச அளவிலான பே‌‌ஷன்டெக்னாலஜி,எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் இன்ஸ்டாலேசன், வெல்டிங் முதலிய திறன்போட்டிகள் 2021-ம் ஆண்டில் சீனாவில் உள்ள ‌ஷாங்காய் மாநகரத்தில் நடைபெற உள்ளது. அதையொட்டி கரூர் மாவட்டத்தில் 434 ேபர்கள் விண்ணப்பித்து முதல்நிலைத் தேர்வில் 25 பேர்கள் தேர்வாகி அவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 6 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் மண்டல, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலந்துகொள்ள முடியும். இந்த 6 பேருக்கும் மாவட்ட கலெக்டர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

மேலும் கடவூர் வட்டம் தொண்டமாங்கினம் கிராமம் சுரே‌‌ஷ் என்பவரது மகன் தினே‌‌ஷ்குமார் கிணற்றில் மூழ்கி இறந்துவிட்டதால் அவரது குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, கலால் பிரிவு உதவி ஆணையர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் விஜயகுமார் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story