விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் கரூர் ரெயில்நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனா


விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் கரூர் ரெயில்நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனா
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 8:37 PM GMT)

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு அமீனா வந்தார். இதையடுத்து காலஅவகாசம் கேட்டதால் திரும்பி சென்றார்.

கரூர்,

கரூர் முதல் சேலம் வரை அகல ரெயில் பாதை பணிக்காக கடந்த 1999-ம் ஆண்டு ஆத்தூர் பகுதியில் ரெயில்வே நிர்வாகத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் பசுபதிபாளையத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு இழப்பீடாக ரெயில்வே நிர்வாகம் குழந்தைவேலுக்கு ரூ.18 ஆயிரத்து 500 வழங்கியுள்ளது. இந்நிலையில் இழப்பீடு தொகையை ரெயில்வே நிர்வாகம் உயர்த்தி வழங்ககோரி கடந்த 2012-ம் ஆண்டு குழந்தைவேல் கரூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் குழந்தைவேலுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 8 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இருப்பினும் ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகையை வழங்கவில்லை.

நிறைவேற்று மனுதாக்கல்

இதனால் கடந்த 2016-ம் ஆண்டு குழந்தைவேல் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்துள்ளார். இதைவிசாரித்த நீதிமன்றம் ரெயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகை வழங்கவில்லை எனில் கரூர் ரெயில் நிலைய பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதன்பேரில் கடந்த 2019-ம் ஆண்டு ஜப்தி நடவடிக்கைக்கு கோர்ட்டு அமீனா சென்றார். அப்போது ரெயில்வே நிர்வாகம் சார்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இருப்பினும் இழப்பீடு தொகை வழங்கவில்லை.

ஜப்தி நடவடிக்கைக்கு வந்த அமீனா

இதையடுத்து நேற்று மீண்டும் ஜப்தி நடவடிக்கைக்காக கரூர் ரெயில்நிலையத்திற்கு கோர்ட்டு அமீனா வந்தார். அப்போது அங்கிருந்த ரெயில்வே அதிகாரிகள் குழந்தைவேலுவிற்கு இழப்பீடு தொகையை வருகிற 20-ந்தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை யடுத்து அங்கிருந்து கோர்ட்டு அமீனா புறப்பட்டு சென்றனர். இதனால் கரூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story