மாவட்ட செய்திகள்

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம்: எழுத்து தேர்வில் முறைகேட்டில் சிக்கியதால் அதிகாரிகள் நடவடிக்கை + "||" + Central Occupational Safety Force Sacked at Mahendragiri ISRO Center: Authorities act in the wake of scandal over written exams

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம்: எழுத்து தேர்வில் முறைகேட்டில் சிக்கியதால் அதிகாரிகள் நடவடிக்கை

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம்: எழுத்து தேர்வில் முறைகேட்டில் சிக்கியதால் அதிகாரிகள் நடவடிக்கை
எழுத்து தேர்வில் முறைகேட்டில் சிக்கியதால் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வள்ளியூர், 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்த மையத்தை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 200 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு அசாம் மாநிலம் பர்பெட்டா மாவட்டம் டட்டோரா பகுதியை சேர்ந்த கைலாஷ் பாருயா மகன் பிரிகு பாருயா (வயது 28) என்பவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஏட்டாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் வேலை பார்த்து வந்தார்.

இவர் முறைகேடாக பணியில் சேர்ந்து இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

அதாவது, கடந்த 2017-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பதவிக்கு எழுத்து தேர்வு எழுதி அதிக மதிப்பெண்ணில் பிரிகு பாருயா தேர்ச்சி அடைந்து இருந்தார். தொடர்ந்து மத்திய பிரதேசம் மாநிலம் பர்வேகாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி மையத்தில் 10.4.2017 முதல் 27.12.2017 வரை பயிற்சி பெற்றார். பின்பு 4 வாரம் காமாண்டோ பயிற்சியும் பெற்றுள்ளார். ஆனால், பயிற்சியின்போது நடத்தப்பட்ட எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த பிரிகு பாருயா பின்பு பயிற்சியின்போது நடந்த தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், பிரிகு பாருயாவின் இரண்டு எழுத்து தேர்வு விடைத்தாள்களையும் சிம்லாவில் உள்ள இந்திய அரசு கையெழுத்து சரிபார்க்கும் மையத்திற்கு அனுப்பி கையெழுத்தை சரிபார்த்தனர். அங்கு சோதனை செய்ததில் இரு கையெழுத்தும் வெவ்வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிரிகு பாருயா நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தற்போது பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரிகு பாருயாவை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சார்பில் பணகுடி போலீஸ் நிலையத்திலும் பிரிகு பாருயா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், மத்திய தொழில் பாதுகாப்பு படை பணியில் சேருவதற்கு இதுபோன்ற முறைகேட்டில் பலரும் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.