வேடசந்தூரில், ஓட்டுனர் பயிற்சி பள்ளி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு


வேடசந்தூரில், ஓட்டுனர் பயிற்சி பள்ளி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 Feb 2020 4:00 AM IST (Updated: 11 Feb 2020 2:18 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேடசந்தூர், 

வேடசந்தூரில் இருந்து கோவிலூர் செல்லும் சாலையில் ஸ்ரீராம்நகரில் வசித்து வருபவர் முகமது ரபீக் (வயது 37). இவர், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி நஜிராபானு. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி நஜிராபானு இறந்து விட்டார். அவர் இறந்து 40-ம் நாள் துக்க நிகழ்ச்சிக்காக, வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான சித்தையன்கோட்டைக்கு முகமது ரபீக் கடந்த 4-ந்தேதி சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஸ்ரீராம்நகரில் உள்ள வீட்டுக்கு முகமது ரபீக் வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 6½ பவுன் நகைகள் மற்றும் ரூ.12 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சீனியம்மாள் தலைமையிலான நிபுணர்கள் வீட்டின் கதவுகள், பீரோவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீசில் முகமதுரபீக் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story