துப்புரவு ஊழியர்களின் சம்பளத்தில் ஒப்பந்த நிறுவனம் மோசடி - மாநகராட்சியில் முற்றுகை
துப்புரவு ஊழியர்களின் சம்பளத்தில் ஒப்பந்த நிறுவனம் மோசடி செய்து உள்ளது என்று மாநகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரை மாநகராட்சியில் நேரடி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதனால் துப்புரவு ஊழியர்களை, ஒப்பந்த நிறுவனம் மூலம் நியமனம் செய்து துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்புரவு ஊழியர்களுக்கு மாநகராட்சி வழங்கும் சம்பளம் வழங்காமல் ஒப்பந்த நிறுவனம் அதில் அதிகஅளவில் பிடித்தம் செய்து வழங்குவதாக கூறப்படுகிறது. இது தவிர ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். வருங்கால வைப்பு நிதி மற்றும் இ.எஸ்.ஐ. தொகை ஆகியவற்றை ஒப்பந்த நிறுவனம் உரிய முறையில் செலுத்த வில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இது குறித்து பல முறை துப்புரவு ஊழியர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் நேற்று மாநகராட்சி அண்ணா மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ள தாவது:-
துப்புரவு ஊழியர்களை பணி அமர்த்தும் ஒப்பந்த நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுகிறது. அதனால் மக்களின் வரிப்பணம் அதிக அளவில் விரயமாகிறது. இந்த நிறுவனம் ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் மோசடி செய்கிறது. மேலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி எண் பெற வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. மேலும் புதிதாக ஊழியர்களை நியமிக்கும்போது அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வரை டெபாசிட் கட்டணம் வசூல் செய்கின்றனர். ஒப்பந்த நிறுவன உரிமையாளரின் உறவினர்கள் சுமார் 70 பேர் துப்புரவு பணி என்ற பெயரில் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் மோசடியாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் துப்புரவு பணி மேற்கொள்வதில்லை. எனவே உடனடியாக மாநகராட்சியின் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story