குடிமகன்களுக்கு தடை; காலிங்கராயன் பாசன விவசாயிகள் அதிரடி அறிவிப்பு - சாவடிப்பாளையத்தில் பேனர் அமைப்பு
குடிமகன்களுக்கு தடை விதித்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு சாவடிப்பாளையம் பகுதியில் பேனர் வைத்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் மிகப்பழமையான பாசன வாய்க்காலாக இருப்பது காலிங்கராயன் வாய்க்கால். கி.பி.1282-ம் ஆண்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. மஞ்சள், வாழை, நெல் என்று பல்வேறு பயிர்களும் செழித்து வளரும் காலிங்கராயன் பாசனப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனவசதி பெறுகிறது. 8 நூற்றாண்டுகளாக பொதுமக்களின் குடிநீர் ஆதாரமுமாகவும் காலிங்கராயன் வாய்க்கால் உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சாய-சலவை ஆலைகளின் கழிவுகள் காலிங்கராயன் பாசனத்தை பாதிப்புக்கு உள்ளாக்கின. விவசாயிகளின் கடுமையான போராட்டம் காரணமாக அந்த நிலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
பவானி காலிங்கராயன் பாளையம் முதல் கொடுமுடி ஆவுடையார்பாறை வரை 56½ மைல் தூரம் பாய்ந்து செல்லும் காலிங்கராயன் வாய்க்காலின் ஈரோடு பகுதியில் துணை வாய்க்கால் கட்டப்பட்டு, காங்கிரீட் தளம் மற்றும் கரை அமைக்கப்பட்டதால் கழிவுநீர் கலப்பு சற்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் சமீப காலமாக காலிங்கராயன் வாய்க்கால் கரையோரங்களில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து இருக்கிறது. மதுக்கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வரும் மதுப்பிரியர்கள் வாய்க்கால் ஓரங்களில் அமர்ந்து குடிக்கிறார்கள்.
திறந்தவெளி பார்களாக காலிங்கராயன் வாய்க்காலை பயன்படுத்தி வரும் அவர்கள் குடிபோதை தலைக்கு ஏறியதும், மதுபாட்டில்களை வாய்க்காலில் வீசி வருகிறார்கள். சிலர் வயல்வெளிகளில் வீசி உடைத்து விடுகிறார்கள். இதனால் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட காலிங்கராயன் வாய்க்கால் மனித சக்தியால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அதிசயம். வரலாற்று சிறப்பு மிக்க அந்த வாய்க்காலை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு அதிகம் இருக்கிறது. ஆனால், குடிமகன்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அதிகாரிகளுக்கு அதுபற்றி அக்கறையும் இல்லை.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் சாவடிப்பாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் மதகுப்பகுதியில் ஒரு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதில், காலிங்கராயன் வாய்க்கால் அருகில் மது அருந்தினால் தண்டிக்கப்படுவீர்கள். இப்படிக்கு காலிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை கூட்டமைப்பு மற்றும் பொதுப்பணித்துறை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
காலிங்கராயன் வாய்க்கால் கரையில் மதுக்குடிக்க குடிமகன்களுக்கு தடை விதித்து விவசாயிகள் அதிரடி அறிவிப்பு செய்து இருப்பதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதுபோல் காலிங்கராயன் வாய்க்கால் முழுமையும் பாதுகாக்க விவசாயிகளும், பொதுமக்களும் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
Related Tags :
Next Story