தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அலுவலகத்துக்கு பூட்டு: கோழிப்பண்ணையாளர்கள் 12 பேர் மீது வழக்கு


தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அலுவலகத்துக்கு பூட்டு: கோழிப்பண்ணையாளர்கள் 12 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Feb 2020 3:47 AM IST (Updated: 11 Feb 2020 3:47 AM IST)
t-max-icont-min-icon

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி இருப்பதாக கூறி நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கோழிப்பண்ணையாளர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி நடப்பதாகவும், இதனால் பண்ணையாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ந‌‌ஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் கூறி 100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணையாளர்கள் கடந்த 6-ந் தேதி நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் ஏற்கனவே நாமம் வரைந்து கையில் எடுத்து வந்த முட்டைகளுடன் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தங்களுக்கு தேவையில்லை என்று கூறியதோடு அலுவலகத்தை இழுத்து பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 பேர் மீது வழக்கு

இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் அலுவலகத்தை பூட்டி பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என 3 பிரிவுகளின் கீழ் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல குழு உறுப்பினர் நாகராஜ் மற்றும் வசந்தராஜ், கோவிந்தராஜ், வெங்கடாசலம், வேலுசாமி, குப்புசாமி, ஆனந்த், சசிக்குமார், சரவணன், நடேசன், சின்னதுரை, தினே‌‌ஷ் என கோழிப்பண்ணையாளர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story