சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தையை 3 மணி நேரத்தில் அழைத்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பாராட்டுக்கள் குவிகிறது


சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு சிகிச்சைக்காக   பச்சிளம் குழந்தையை 3 மணி நேரத்தில் அழைத்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்   பாராட்டுக்கள் குவிகிறது
x
தினத்தந்தி 10 Feb 2020 11:49 PM GMT (Updated: 10 Feb 2020 11:49 PM GMT)

சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு பிறந்து 7 நாளே ஆனபச்சிளம்குழந்தையை 3 மணி நேரத்தில் அழைத்துவந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

சிவமொக்கா, 

தாவணகெரே மாவட்டம் பெல்லி மாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி சுதா. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுதாவுக்கு சிவமொக்காவில் உள்ள மெக்கான் தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்ததால் சாமியும், அவரது மனைவி சுதாவும், குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை இருந்ததை கண்டுபிடித்தனர். அதாவது பிறந்து 7 நாளே ஆன பச்சிளம் குழந்தையின் இதயத்தில் சுத்திகரிக்கப்படாத ரத்தமும், சுத்திகரிக்கப்பட்ட ரத்தமும் ஒன்றாக கலந்திருப்பதும், இதனால் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதும் டாக்டர்களுக்கு தெரியவந்தது.

இதய பிரச்சினை

இதற்காக குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் இதய பிரச்சினைக்காக உயர் சிகிச்சை அளிக்க டாக்டர்கள் தீர்மானித்தனர். இதற்காக அந்த குழந்தையை பெங்களூரு இந்திராகாந்தி குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து தொட்டபேட்டே போலீசாருக்கு அவர்கள் கொடுத்தனர்.

இதைதொடர்ந்து ஆம்புலன்சில் குழந்தையும், அதன் தாயும் ஏற்றப்பட்டனர். மேலும் குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் ஆம்புலன்சில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் குழந்தையின் உடல் நிலையை கவனிக்க டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

3 மணி நேரத்தில்...

ஆம்புலன்ஸ் வேனை டிரைவர் சதாம் உசேன் என்பவர் ஓட்டினார். சிவமொக்காவில் இருந்து பெங்களூரு சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பச்சிளம் குழந்தை என்பதால், சிகிச்சைக்காக விரைவாக கொண்டு செல்லும் வகையில் ஜீரோ போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இதனால் டிரைவர் 300 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்சில் 3 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து குழந்தையை பத்திரமாக பெங்களூரு இந்திராகாந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அந்த குழந்தைக்கு, டாக்டர்கள் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை (என்.ஐ.சி.யு.) பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு குழந்தையை பத்திரமாகவும், விரைவாகவும் அழைத்து வந்த டிரைவர் சதாம் உசேனுக்கும், அவருக்கு உதவிய போலீசாருக்கும் பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அறுவை சிகிச்சை

இதுதொடர்பாக இந்திராகாந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரி டாக்டர் பிரகலாத் கூறுகையில், இதய கோளாறு ஏற்பட்டுள்ள குழந்தை 1.8 கிலோ எடை தான் உள்ளது. அந்த குழந்தையின் இதயத்தில் கெட்ட ரத்தமும், சுத்திகரிக்கப்பட்ட ரத்தமும் கலந்துள்ளது. இதனால் குழந்தையின் பிற உடல் உறுப்புகளில் ஆக்ஜிசன் அளவு குறைந்து இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு அதிகளவு ஆக்ஜிசன் தேவைப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த குழந்தைக்கு இன்னும் 7 முதல் 10 நாட்கள் இங்கேயே சிகிச்சை அளிக்க திட்டமிட்டு உள்ளோம். அதன் பிறகு குழந்தை, பெங்களூரு ஜெயதேவா இதய நோய் சிகிச்சை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும். அங்கு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story