பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் - கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு


பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் - கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 12 Feb 2020 4:45 AM IST (Updated: 11 Feb 2020 10:56 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றி கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கியதாக மணிவண்ணன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணிவண்ணனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முதலில் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து கடந்த மே மாதம் கோவை மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அங்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த கோர்ட்டில் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் தான் தண்டனை விதிக்க முடியும். இந்த வழக்கு பாலியல் குற்றமாக இருப்பதாலும், இதில் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதால், வழக்கு விசாரணையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று இந்த வழக்கு கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக சேலம் மத்திய சிறையில் இருக்கும் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி சக்திவேல், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை கோவையில் உள்ள மகளிர் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டார். அத்துடன் இந்த வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து திருநாவுக்கரசு உள்பட 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த வழக்கு பாலியல் தொடர்பானது என்பதாலும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் கோவையில் உள்ள மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கோர்ட்டில் வருகிற 25-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

Next Story