வாலாஜாபாத் ஒன்றியத்தில் 42 பேருக்கு விலையில்லா கறவை மாடுகள்


வாலாஜாபாத் ஒன்றியத்தில் 42 பேருக்கு விலையில்லா கறவை மாடுகள்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 11 Feb 2020 5:45 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு 63 பேருக்கு வெள்ளாடுகளை வழங்கினார்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஓழையூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் விலையில்லா வெள்ளாடுகள் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 63 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 3 ஆயிரத்து 250 மதிப்பீட்டில் குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் 252 ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு 63 பேருக்கு வெள்ளாடுகளை வழங்கினார். மேலும் தமிழக அரசின் சார்பில் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 25 நாட்டுக்கோழி குஞ்சுகள் வீதம் 36 குடும்பத்தினருக்கு நாட்டுக்கோழி குஞ்சுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து ஆட்டுப்புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் 42 பேருக்கு ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்து 230 மதிப்பில் கறவை மாடுகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கலா, உதவி இயக்குனர் திருமாறன், ஒன்றிய செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தென்னேரி வரதராஜுலு, ஓழையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களும், அலுவலர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Next Story