மார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை
மார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் போலீசில் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளையை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 65). இவருடைய மகன் பொன் விஜயன். இவர்கள் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் எதிர்புறம் நகை கடை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மர்ம நபர் ஆசைத் தம்பியின் வீட்டில் புகுந்து பூஜை அறையில் இருந்த 57 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்தார். பின்னர் அங்கிருந்த நகைக்கடைக்கான சாவியையும் எடுத்து சென்று, கடையை திறந்து சுமார் 1½ கிலோ நகைகளை அள்ளி சென்றார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதுபோல், கடந்த டிசம்பர் மாதம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நகை கடைக்குள் புகுந்த கொள்ளையன் அங்கிருந்தும் நகைகளை கொள்ளையடித்து சென்றான். இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும், செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், குமரி- கேரள எல்லையில் வைத்து ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நித்திரவிளையை சேர்ந்தவர் என்பதும், மார்த்தாண்டம் பகுதியில் இரண்டு நகை கடைகளில் கொள்ளையடித்ததும் தெரிய வந்துள்ளது. கொள்ளையடித்த நகையால் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கி குவித்துள்ளார்.
இவருக்கு வேறு பல கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, அவரிடம் போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் இறுதியில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story