பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ‘மாபெரும் சாலைகள்’ திட்டப்பணி அறிமுகம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் ‘மாபெரும் சாலைகள்’ திட்டப்பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், ‘மாபெரும் சாலைகள்’என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று அடையாரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ‘மாபெரும் சாலைகள்’ திட்டப்பணிக்கான வடிவமைப்பு திட்டம் மற்றும் வழிகாட்டுதல் கொள்கைகள் அடங்கிய புத்தகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-
30 ஆண்டுகள்
தமிழக அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளான பாதுகாப்பான குடிநீர், சாலை வசதிகள், சுற்றுப்புற தூய்மை, சாலை மேம்பாட்டு பணிகள், துப்புரவு பணி ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளையும், 5 ஆயிரத்து 525 கி.மீ நீளமுள்ள 33 ஆயிரத்து 374 உட்புற சாலைகளையும் பராமரித்து வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி ‘மாபெரும் சாலைகள்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன்மூலம் குடிநீர் குழாய்கள், மின் இணைப்புகள், மழைநீர் வடிகால்கள் போன்றவை சரியான முறையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்படும். இதனால், சாலைகளை மேலும் தோண்டும் நிலை ஏற்படாமல், அடுத்த 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதப்படுத்துவது தவிர்க்கப்படும்.
முதற்கட்டமாக
110 கி.மீ. சாலைகள்
இந்த திட்டத்தில் 426 சதுர கி.மீ பரப்பளவில், 400 கி.மீ. பேருந்து சாலைகள், மற்ற துறைகளிடம் உள்ள 286 கி.மீ. பிரதான சாலைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படும். இதன் முதற்கட்டமாக அண்ணாநகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் அடையார் ஆகிய இடங்களில் 70 சதுர கி.மீ அடங்கிய 110 கி.மீ. நீளமுள்ள சாலைகள் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தை அமல்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி மற்றும் சர்வதேச வல்லுனர்கள் இணைந்து இதற்கான வடிவமைப்பு, திட்டமிடுதல், கட்டுமானம் மற்றும் சீராய்வு ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் இந்த திட்டம் தமிழக அளவில் கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
123 விருதுகள்
கடந்த 9 ஆண்டுகளில் ரூ.36 ஆயிரத்து 317 கோடிகளில் 1.21 லட்சம் கி.மீ சாலைகள் நகர்ப்புறத்திலும், கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசிடம் இருந்து கடந்த 9 ஆண்டுகளில் ஊரக உள்ளாட்சி துறையில், 123 விருதுகள் பெற்று நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல், நகராட்சி நிர்வாக கமிஷனர் கா.பாஸ்கரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் த.ந.ஹரிஹரன், செயல் இயக்குனர் டாக்டர் த.பிரபுசங்கர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story