மார்த்தாண்டம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை 20-ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்


மார்த்தாண்டம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை 20-ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் பரிதாபம்
x
தினத்தந்தி 12 Feb 2020 5:15 AM IST (Updated: 12 Feb 2020 12:33 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே 20-ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே காரவிளையை சேர்ந்த செல்வராஜ் மகன் வினீஷ் (வயது 33), தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற 20-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.

இந்தநிலையில், வினீஷ் சொந்தமாக வீடு கட்டி வந்தார். இதற்கு போதுமான பணம் இல்லாததால் வீடு கட்டும் பணி முழுமையாக முடியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வினீஷ் வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்து வந்தார். ஆனால், வங்கியில் அவர் எதிர்பார்த்த படி கடன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவர் ஏமாற்றத்துடன், மனமுடைந்த நிலையிலும் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வினீஷ் தாயாருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டு விட்டு அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் அவரது தாயார் வினீசை எழுப்ப சென்றார். அப்போது, படுக்கை அறையில் அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர்.

வீடு கட்டி முடிப்பதற்கும், திருமண செலவிற்கும் போதிய பணம் இல்லாததால் மன வேதனையில் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வினீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

20-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story